×

சாலை விரிவாக்கத்திற்காக வீடுகளை இடித்ததால் 100 குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்

*மக்கள் குறைதீர் கூட்டத்தில் திருவானைக்காவல் பகுதி மக்கள் மனு

திருச்சி : திருவானைக்காவல் செக்போஸ்ட் அருகே சாலை விரிவாக்கப் பணிக்காக வீடுகளை அப்புறப்படுத்தியதால் வீடின்றி தவிக்கும் 100 குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்ககோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. சிறப்பு டிஆர்ஓ வடிவேல் பிரபு தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் வீட்டுமனை பட்டா, சாலை வசதி, வேலைவாய்ப்பு மற்றும் அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் மனு அளித்தனர்.

திருவானைக்காவல் கொள்ளிடம் செக்போஸ்ட் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவர் தலைமையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘இந்த பகுதியில் 40 ஆண்டுகளாக திருவானைக்காவல் கொள்ளிடம் செக்போஸ்ட் அருகே வசித்து வருகிறோம். எங்களிடம் ஆதார், ரேஷன் கார்டுகள் உள்ளது. இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் வந்து சாலை விரிவாக்க பணிக்காக எங்களது அனைத்து வீட்டையும் இடித்து விட்டனர். இதனால் நாங்கள் குழந்தைகளுடன் நடுரோட்டில் வசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு உடனடியாக மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

திருவெறும்பூர் பெல் மருத்துவமனையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டி புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியினர் மனு அளித்தனர்.தமிழ் மாநில ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் (சிபிஐ) மாவட்ட செயலாளர் செல்வராஜ் அளித்த மனுவில், ‘மருங்காபுரி தாலுகா, காரைப்பட்டி கிராமத்தில் உள்ள அம்பேத்கர் நகரின் மேல்புரம் பெரியகுளம் என்ற ஏரியிலிருந்து கட்டப்பட்டுள்ள கலிங்கி மற்றும் வாய்க்கால் வழியாக மணப்பாறை முதல் துவரங்குறிச்சி வரை செல்லும் நெடுஞ்சாலையை கடந்து மழைநீர் தடையின்றி கீழ்புறம் உள்ள இலந்தகுளத்திற்கு செல்லும்.

ஆனால், சாலை மேம்பாட்டு பணி காரணமாக சாலை சமன் செய்யப்பட்டதால், மழைநீர் சாலையை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையின் மேல்புறம் உள்ள பொதுமக்களின் வீட்டுக்குள் தண்ணீர் செல்லும் நிலை உள்ளது. மேலும், குளத்தில் மழைநீர் சேமிக்க முடியாத சூழல் உள்ளது. எனவே, மழைநீர் குளத்துக்கு செல்ல வழி செய்ய வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக தர்காக்கள் பேரவை மாநில தலைவர் அல்தாப் உசேன் அளித்த மனுவில், ‘திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகில் உள்ள தர்கா கபரஸ்தான் பழமையானது. தமிழக வக்பு வாரியத்துக்கு கட்டப்பட்ட இந்த தர்காவை சிலர் சட்டவிரோதமாக இடித்துவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அதை மீண்டும் கட்டித்தரவேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

The post சாலை விரிவாக்கத்திற்காக வீடுகளை இடித்ததால் 100 குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Thiruvanaikaval ,Mani Trichy ,
× RELATED திருச்சி ஸ்ரீரங்கத்தில் சாலையில்...